30. மண்ணானது என் காதல்

ஆண்டுகளாய் வந்து போகும்
காதலர் தினம் என்னை
வஞ்சனையாய் கேட்டாலும்
பல்லியை விழுங்கிய தவளையாய்
வாய் திறந்து பேச மாட்டேன்.

கடற்கரையோரம் ஆயிரம் கால்கள்
நெருங்கிப் பழக
நெருக்கமில்லா இடமில்லை,
தனிமையில் நான் அமர.

எட்டிப் பார்க்கும் நிலவொளியில்
துள்ளியோடும் வெள்ளிகளாய்,
பள்ளி கொண்ட பாசங்கள்
கிள்ளிக் கிள்ளி பேசுகின்றது.

எங்கோ ஒரு தூரம்
நட்டு வைத்த குடைக்குள்ளே
முத்தமிடும் சத்தம்.

புரிந்து கொண்டேன் நான்
இப்படி யொரு வாழ்க்கையா...?
காதல் இல்லாமல்,
காத(லன்/லி) இல்லாமல்..........

பாலை வனத்துப் பனையும்
பட்டுப் போன கிளையும்,
சொல்லாத காதலுக்கு
நான் சொல்லுகின்ற சாட்சி.

இலையுதிர் காலமாய்
முடியுதிர்ந்து போகின்றது,
காதல் முகம் இல்லாமல்
நொந்து மனம் தவிக்கின்றது.

பொத்திப் பொத்தி வைத்த காதல்
மொத்தமாய் கவிழ்ந்திருக்கு,
மொத்தத்தில் என் காதல்
மண்ணாகப் போயிருச்சி( போய்விட்டது)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS